மகப்பேற்றுக்கு பின்னர் ஏற்படும் உளவியல் மாற்றங்கள்
Postpartum Depression
குழந்தையைக் கழுத்தை அழுத்திக் கொன்ற தாய்....
இப்படி ஒரு செய்தியை ஒருதடவையாவது வாசித்து... '' இவளுக்கெல்லாம் எதுக்கு குழந்தை? டாஷ் டாஷ்"… என்று கட்டாயம் கெட்டவார்த்தையால் திட்டி இருப்பீர்கள்...
இப்படிப்பட்ட பெண்களைத் திட்டும் முன் நாம் முதலில் திட்ட வேண்டியது அந்தப்பெண்ணைச் சுற்றி இருப்பவர்களைத்தான் ...
ஒரு பெண் தாய்மை அடையும்பொழுது புதிய பிறவி எடுக்கிறாள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவள் மனநிலையிலும் பாரிய மாற்றம் ஏற்படும் என்பதும் உண்மை...
குழந்தை பிறந்த பிறகு, பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "இதெல்லாம் ஒரு விஷயமா..குழந்தையை கவனி.. இனிமே அவன்/அவள்தான் உன் உலகம்" என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள்....
அன்று முதல் இன்று வரை ஒரு தாய் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு இலக்கணம் வகுத்து, அந்த கட்டத்துக்குள் நீ உன்னை நிரூபிக்க வேண்டும் என்று அந்த புதிய தாய்க்கு அழுத்தம் தர ஆரம்பிக்கிறார்கள்...
அந்த தாய்க்கும் இது ஒரு புதிய தொடக்கம், புதிய சூழல் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை....
தாய் என்பதை தாண்டி, அவளும் ஒரு தனித்துவம் வாய்ந்த பெண்மணி என்பதை மறந்து விடுகிறோம்....
அவள் மீது நம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் திணிக்கிறோம்.
எல்லோருக்கும் இந்த தாய்மை அடையும் அனுபவம் ஒரே விதமாக அமையும் என்றும் சொல்ல முடியாது....
பலருக்கு அந்த தாய்மை அடையும் பருவம் வசந்தகாலமாக அமைந்தாலும், சில பெண்களுக்கு அது நீந்திக் கடக்க வேண்டிய சீற்றம் கொண்ட கடலாகவே அமைகிறது.
குழந்தைப் பிரசவம் சாதாரண சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி.... சிசேரியன் பிரசவமாக இருந்தாலும் சரி... பிரசவத்திற்குப் பின்னர் சில பெண்களில் பாரதூரமான மன உளவியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.
இவை கவனிக்கப்படாமல் சரியான சிகிச்சைகள் கொடுக்கப்படாமல் விட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்துக்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.
இதனால் சிலவேளைகளில் தாய் தானே தற்கொலை செய்யக்கூடிய நிலைமைகளும் சிலவேளைகளில் தனது குழந்தையை கொலை செய்து விடக்கூடிய நிலைமைகளும் தோன்றும்.
அறிவியல் சொற்களில் இதனை Postpartum Depression என்பர். குழந்தைப்பேற்றுக்கு பின் சில பெண்களை ஆட்கொள்ளும் மன அழுத்தம் இது. இதனை நான் ஒரு பொழுதும் நோய் எனக் கூறமாட்டேன். இது ஒரு விதமான மனநிலை.
அறிகுறிகள் எவை?
Postpartum blue
என்றொரு நிலை உள்ளது. இது குழந்தை பிறந்ததும் பெண்ணின் மனதில் ஏற்படும் சிறிய சஞ்சலம். சம்பந்தமில்லாமல் அழுவது, சம்பந்தமில்லாமல் கவலைப்படுவது, சின்னச் சின்ன விடயங்களுக்கு எரிந்து விழுவது போன்ற சம்பவங்கள் இந்த நிலையில் ஏற்படும்.
இது அநேகமான பெண்களுக்கு ஏற்பட்டு சிறிது காலத்திலேயே மறைந்துவிடும். இதற்குத் தேவையான ஒரே மருந்து கணவனினதும், உறவினரதும் அன்பு.
இதைவிட தீவிரமான Postpartum depression என்றொரு நிலை இருக்கிறது. இந்த நிலை ஏற்பட்டு சரியாக கவனிக்கப்படாமல் விடும்போதுதான் தற்கொலை செய்தல், குழந்தையைக் கொல்லுதல் போன்ற சிக்கலான நிலைக்குப் பெண்கள் செல்கிறார்கள்.
சாதாரணமாக பெண்கள் பிரசவத்திற்குப் பின்னர் ஹேர்மோன் மாற்றங்களினாலும், சரியான தூக்கம் இன்மையாலும் புதிய குழந்தையுடன் தமது வாழ்க்கையை இசைவாக்கப்படும் போது ஓரளவு சாதாரண மன நிலைமாற்றங்களை அனுபவிப்பார்கள்.
ஆனால் மிகவும் கவலையாகவும், மிகவும் தம்மைக் குறைத்து மதிப்பிட்டு தாழ்வு மனப்பான்மையாகவும், எதிலும் ஒரு விருப்பில்லாமல் நம்பிக்கை இழந்தவராகவும், மன மாற்றங்கள் கொண்டவராகவும் பல வாரங்களாக இருந்தால் இவ்வாறான நோய்க்குரிய அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் சிலர் சொல்வார்கள் தமது புதிய குழந்தை மீது தனக்கு எந்தவிதமான சந்தோசமோ, ஆசையோ கிடையாது என்றும் தமக்கு வழமையாக சந்தோசம் தரும் விடயங்கள் கூட தற்போது சந்தோசமாக இல்லை என்றும் கூறுவார்கள்.
இவ்வாறான நோய் அறிகுறிகள் இருக்கும் போது கூட இருப்பவர்கள் அவதானித்து அதற்கான பரிகாரம் தேட முயற்சிக்க வேண்டும். இதனை குடும்பத்தவர்கள் அலட்சியப்படுத்தி, கால தாமதமாகி கவனிக்காமல் விட்டார்களாயின் இறுதியில் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான நிலைகள் வரக்கூடும்.
"இதெல்லாம் வெறும் கட்டுக் கதை. நாங்க எல்லாம் புள்ளையே பெத்ததில்லையா? புள்ளைய பெத்தோமா, வளர்த்தோமானு ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருந்தா, இதெல்லாம் ஒன்னும் தோணாது"
என்று எளிதாக சொல்லிவிட்டு செல்வார்கள். ஆனால், தனது இடத்திலிருந்து தன்னை புரிந்துகொள்ள யாரேனும் இருக்கமாட்டார்களா என்று மனம் ஏங்கும். இதனை தாயால் எளிதாக கையாள முடிவதில்லை....
முதல் அறிகுறிகள்
முதல் அறிகுறியியல் முதல் சில வாரங்களில் தன்னை வெளிப்படுத்தத் தொடங்குகிறது.
# அளவுக்கதிகமான பயம்
# அதிகமான மன அழுத்தத்தை உணர்தல்
# தேவையில்லாத பயத்துடன் நெஞ்சு படபடப்பு
# சின்ன சின்ன விடயங்களுக்கே எரிந்து
விழுந்து கோபப்படுதல்
# தூக்கமின்மை
# பசியின்மை
# அதிகமாக உணர்ச்சிவசப்படுதல்
# தன்னைப்பற்றி யாரோ தப்பாக பேசுவது போல உணர்தல்
# தன்னை அல்லது குழந்தையை யாரோ கொலை செய்ய முயற்சிப்பது போல உணர்தல்
# செத்துவிடலாம் போன்ற எண்ணம் தோன்றுதல்
# குழந்தை ஒரு பாரமாக உணர்தல்
# குழந்தையைப்பார்த்து கோபப்படுதல் ஆ
# எப்பொழுதும் ஒரு குற்ற உணர்வும், ஒரு காரணமின்றி தன்னையே குற்றம்சாட்டும் இயல்பும்.
# தற்கொலை முயற்சி
# மூளைக்குள் கேட்கும் புரியாத அலறல்கள்..
சிலருக்கு காதுகளில் யாரோ அலறுவதும் திட்டுவதும் பலமாக கேட்கும். "நீ எதுக்குமே லாயக்கில்லை. உனக்கு எதுவுமே தெரியல. குழந்தையை வளர்க்கறதெல்லாம் உனக்கு வராது. இதுக்கான திறமையெல்லாம் இல்லாம, தயாராகாம எதுக்கு உனக்கு இந்த குழந்தை?" என்பது போன்ற அசரீரியான குரல்கள் ஒலிக்கும். மேலும் வெளியில் பகிர்ந்தால், அனுதாபம் நாடுவதாக புரிந்துகொள்வார்கள் எனும் அச்சமும் சேர்ந்து புதிய தாயை இன்னும் சிக்கலில் மாட்டி விடுகிறது...
உள்ளிருக்கும் எண்ணங்களை பகிர, நம்பிக்கையான நபர்கள் யாருமில்லாமல் போனால், இந்த மன அழுத்தம் அதிகமாகி நம்மையே தின்றுவிடுவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தையின் அழுகுரல் கேட்கும்போதெல்லாம், ஒரு எரிச்சல் வந்துபோகும்.
மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் இருவாரங்களுக்கு மேலாக நீடித்தால், நோய் அறிகுறிகள் தீவிரம் அடைந்தவாறு இருந்தாலும், தாய் தன்னைக் கவனிக்காமலும் தனது குழந்தையைக் கவனிக்காமலும் இருந்தால் அல்லது தாய்க்கோ குழந்தைக்கோ தீங்கு செய்யக்கூடியவாறான எண்ணங்கள் இருந்தால் வைத்திய ஆலோசனை உடனடி அவசியம்.
மேலும்,
பிரசவத்தின் பின்னர் பிறந்த குழந்தையை மட்டும் கவனித்து அதற்கான தேவைகைள பூர்த்தி செய்வதுடன் நின்று விடாமல் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
தாயின் மன நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.குழந்தை பிறந்த பின் ஏற்படும் இந்த நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது சுற்ரி வர இருக்கும் பொறுப்பற்ற சூழல்.
மனைவி இப்போதுதான் குழந்தை பெற்றுள்ளாள், இரவிரவாக கண்முழித்து குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள் என்ற அவளின் கஷ்டங்களை ஆண்கள் புரிந்துகொள்ளாமல் அவளை மேலும் அழுத்தத்துக்கு ஏற்படுத்துவதுதான் இந்த நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம்.
ஆக தாய்க்கும் சேய்க்கும் தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் உணர வேண்டும் ...
மேலும் ஒவ்வொரு கணவனும் தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், குழந்தையைப்பொறுப்பெடுத்துவிட்டு தாயை கொஞ்சம் ஓய்வெடுக்கவிட்டாலே அநேகமான உளவியல் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
அதேபோல் குழந்தை பிறந்து கொஞ்சநாளைக்கு தேவையில்லாத குடும்ப பிரச்சினைகளையும், பொருளாதார பிரச்சினையும் குழந்தை பெற்றவ தாயிடம் கொடுக்காமல் கணவன் அல்லது குடும்பத்தில் வேறு ஒருவர் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன் அவரது சாப்பாட்டு விருப்பம், பசி, தூக்கம், சந்தோசம், கவலை என்பன குறித்து அறிந்தவண்ணம் இருக்க வேண்டும்.
அவருக்குப் பிரச்சினைகள் இருக்கும் போது கணவரோ, மற்றைய குடும்பத்தினரோ அந்தப் பெண்ணை தனிமையில் துன்பப்டாமல் உதவிகள் செய்ய வேண்டும்.
இவற்றிற்கு மேலதிகமாக
Depression என்பது மூடி மறைத்து, மறக்க முயற்சிக்க வேண்டிய விஷயம் இல்லை. நம்மால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை என்றால், அதற்கான சரியான உதவியை நாடுவது தவறில்லை...
காலதாமதமாக்காமல் தகுந்த மன உளவியல் வைத்திய நிபுணரிடம் அழைத்துச் சென்று அவரது நிலைமைகளை ஆராய்ந்து அதற்கான சரியான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்

No comments:
Post a Comment