குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணின் பொறுப்பு மட்டுமல்ல... அது தந்தைக்கும் உரித்தானது. பிரசவ காலத்திலும் அதற்குப் பின்னான நாட்களிலும் குழந்தையின் தந்தை உடனிருந்து குழந்தையை கவனிப்பது மற்றும்
குழந்தை வளர்ப்பில் தாயானவள் கட்டாயமாக இருப்பார். ஆனால், பெரும்பான்மையான வீடுகளில் தந்தையானவர் இதில் இணையாமல் இருக்கிறார். தந்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம்.
மனைவிக்கும் குழந்தைக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதை தாண்டி குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் பாரிய பங்குண்டு என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தந்தையின் அணைப்பும் அருகாமையும் குழந்தைக்கு உணர்வுரீதியான பாதுகாப்பை அளிக்கிறது. மிகச் சிறு குழந்தையாக இருக்கும்போது தாயுடன் தந்தையும் குழந்தை பராமரிப்பு வேலைகளை கவனித்துக் கொள்ளும்போது அது பெண்ணுக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது.
தந்தைக்கும் குழந்தைக்குமான பாசவெளி கட்டமைக்கப்படுகிறது. இருவரும் நாம் நமக்கானவர்கள் என்ற நெருக்கத்தை உணருகின்றனர். வளரும் காலத்தில் தந்தையின் வளர்ப்பு குழந்தைகளை தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக மாற்றுகிறது. சமூகத்துடன் எளிதில் பழகும் மனநிலையை தருகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், அசாதாரண சூழலில் எளிதாக முடிவெடுத்தல் போன்ற திறன்களை குழந்தைகளிடம் அதிகரிக்கிறது. தந்தையின் நெருக்கம் உயர்ந்த லட்சியங்களை நோக்கி குழந்தைகளை தள்ளுகிறது என உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரசவத்தில் பெண்ணின் வலியை வாங்க முடியாவிட்டாலும் அதை நேரில் பார்த்து காதல் பெருகும் ஆண்களும் உள்ளனர். குழந்தையின் மீதான பாசத்தை வெளிப்படுத்த தந்தைக்கு ஆர்வம் இருந்தாலும் அதற்கான சூழல் எம் சமூக கட்டமைப்பில் இல்லை என்பதே வருத்தம் தருகிறது.... அழுத குழந்தையை ஒரு ஆண் தூக்கி வைத்து இருந்தாலே அவனை தியாகி என்ற மனப்பாங்கில்தான் இன்னும் நமது சமூகம் பார்கிறது...
Cerelac, தண்ணீர் பாட்டில், Baby rusk, நாப்கின், பழத்துண்டுகள் அடங்கிய டப்பா, Diapers, குழந்தை விளையாட கொஞ்சம் பொம்மைகள், குழந்தைக்கு இரண்டு மாற்றுத் துணி, குழந்தை உடையில் வாந்தி எடுத்துவிட்டால் அல்லது சிறுநீர் கழித்துவிட்டால் தாய்க்கு மாற்று உடை இன்னும் பல...
இவை எல்லாம் எங்கு சென்றாலும் ஒரு தாய் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள்.
ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை. அவர்கள் எப்போதும்போல அவர்களது செல்போனை எடுத்துக்கொண்டால் மட்டும் போதுமானது...
குழந்தை பிறந்த பிறகு, ஓர் ஆண் வெளியே செல்ல எந்தவித சிரமமும் இல்லை. ஒரு பெண்ணுக்கு அப்படி இல்லை. இதன் காரணமாகவே, பல நேரங்களில் வெளியே செல்வதற்கு பெண்கள் யோசிப்பதுண்டு.
தாய் குளிக்கும் போது அல்லது சமையல் செய்யும் நேரத்தில் மட்டும் கணவர் சிறிது நேரம் குழந்தையை பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்...
எந்த நேரமும் குழந்தையை சமாதானப்படுத்துவது பெண்ணால் மட்டுமே முடியும் என்று பலர் எண்ணுகிறார்கள்.
ஏன் அப்பாக்களால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாது? தங்களுக்கு குழந்தையை சமாதானப்படுத்தத் தெரியவில்லை, வளர்க்கத் தெரியவில்லை, சாப்பாடு ஊட்ட தெரியவில்லை என்பதை எண்ணி ஏன் ஆண்கள் வெட்கப்படுவதில்லை?
ஒரு குழந்தையை பெற்றுக்கொண்ட நாள் முதல் பெண் என்பவள் குற்றஉணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்...
ஆனால் கணவர்களுக்கு அந்தக் குற்ற உணர்ச்சி ஏற்படுவதாகத் தெரியவில்லை.
குழந்தை வளர்ப்பது பெண்களின் பிரதான பொறுப்பாக பார்க்கப்படுகிறது. குழந்தையை பார்த்துக்கொள்ளும் முழுப் பொறுப்பும் தாய்க்குத்தான் இருக்கின்றது என்ற பிம்பத்தை இந்தச் சமூகம் எம்முள் ஏற்படுத்தியிருக்கிறது.
தன் குழந்தைக்கு போதுமான அன்பை, உணவை, கல்வியை, நடத்தையை அளிக்கவில்லையா என்று ஒவ்வொரு தருணத்திலும் தாய்மார்கள் எண்ணிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.
அந்தப் பொறுப்புகளில் தந்தைகளுக்கு பெருமளவு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை...
தந்தைமாரே உங்கள் முதல் கடமை என்னவெனில்
குழந்தையைத் தாயானவள் பார்த்துக்கொள்வதுபோல, குழந்தையின் தாயை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனைவியையும் சேர்த்து நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இதுவே முதல் கடமை.
என்னென்ன பொறுப்புகளை அப்பாக்கள் செய்யலாம்?
🔹 குழந்தையை குளிப்பாட்டுவது
🔹 தொட்டிலில் போட்டு தூங்க வைப்பது
🔹 பாட்டில் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு 🔹சரியான நேரத்துக்குத் தவறாமல் பால் தருவது.
🔹நாப்கின் மாற்றுவது.
🔹குழந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தருவது
🔹குழந்தையுடன் நேரம் செலவழிப்பது
இதையெல்லாம் நீங்கள் செய்தால் தாய்க்கு ஓய்வு கிடைக்கும். உடல் புத்துணர்வு அடைந்த பின்தான் எந்த வேலையும் தாயால் சீராக செய்ய முடியும்.
சில குழந்தைகள் தந்தையிடம் செல்லாது? என்ன காரணம்?
குழந்தையை தூக்குவது, கொஞ்சுவது, உணவு ஊட்டுவது என முழுமையாக தாயே குழந்தையை பராமரித்தால், தாயிடம் மட்டுமே குழந்தைக்கு நல்லுறவு இருக்கும். தந்தையை வேறு ஒரு ஆளாக குழந்தை புரிந்து கொள்ளும். தந்தையர்கள் சிலர் விளையாட்டுக்காக குழந்தையை மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதனாலும் குழந்தை தந்தையிடம் செல்லாது. தாயுடன் மட்டுமே நெருக்கம் காண்பிக்கும்
அம்மாக்கள் செய்யும் தவறு?
குழந்தை சாப்பிடவில்லை என்றால் அப்பாவிடம் சொல்லிவிடுவேன். அப்பா அடிப்பாரு அல்லது வீட்டில் மாமா, சித்தப்பா எவரேனும் இருந்தால் அவர்களை காண்பித்து குழந்தையை பயமுறுத்தி உணவு ஊட்டுவது, தூங்க செய்வது போன்றவற்றை செய்ய கூடாது. இதெல்லாம் தவறான வளர்ப்பு முறை
தந்தைக்கும் குழந்தைக்கும் உடல் மற்றும் உணர்வு ரீதியாக பிணைப்பு உருவாக இருவருக்கும் இடையே தாய் ஒரு பாலமாக செயற்பட வேண்டும். எம் அனைவருக்கும் அவரவர் குழந்தைப் பருவம் மறந்து போயிருக்கும். குழந்தைகளின் வழியாகத்தான் நமது குழந்தைப் பருவத்தை இன்னொரு முறை திரும்பப் பெற முடியும். ஒரு குழந்தையை புரிந்து கொண்டு வளர்ப்பது ஆச்சரியங்கள் நிறைந்தது. தாயும் தந்தையும் இணைந்து அணு அணுவாய் ரசித்து வளர்க்கும்போது எல்லா வகையிலும் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்பற்றினால் வாழ்க்கை சுகம். சமூகத்துக்கு நல்ல குழந்தையை கொடுக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

